டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
- கடைக்கான உரிமம் முடிவடைந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- போலீசார் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அமர்ஜோதி லே அவுட் வெங்கடாசலபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இருப்பினும் அந்த கடை அகற்றப்படவில்லை.
அங்கு மது அருந்துபவர்கள் வீட்டின் முன்பு சிறுநீர் கழிப்பது, பாட்டில்களை உடைப்பது என அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே நட முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், கடைக்கான உரிமம் முடிவடைந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து நேற்றிரவு திடீரென கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் சிறிது நேரம் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய போலீசார் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.