ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: ம.தி.மு.க. போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி- வைகோ
- சுப்ரீம்கோர்ட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனு மீதான விசாரணை முடிவில் சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில், "ஒரு தொழில்துறையை மூடுவது ஒரு முதல் தேர்வு அல்ல. ஆனால் வேதாந்தாவின் கடுமையான மீறல்களுடன் நீண்ட மற்றும் தொடர்ச்சியான மீறல்களும் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு உயர்நீதிமன்றத்தையும் சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது என்று தெரிவித்துள்ள சுப்ரீம்கோர்ட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டது.
இது ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது, தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அயர்வும் சலிப்புமின்றி போராடியதற்கும் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.