வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பு
- கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.
மேலும் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 64.96 அடியாக உள்ளது. அணைக்கு 1309 கன அடி நீர் வருகிறது. 4622 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் வைகை பூர்வீக பாசன பகுதி 3க்கு இன்று முதல் 9 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை வைகை அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்று முதல் 18-ந் தேதி வரை 9 நாட்களுக்கு 1830 மி.கன அடியும், வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 10 நாட்களுக்கு 418 மி.கன அடியும் வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 8 நாட்களுக்கு 752 மி.கன அடியும், 3000 அடிக்கு மிகாமல் 27 ஆயிரத்து 529 ஏக்கர், 40 ஆயிரத்து 743 ஏக்கர் மற்றும் 67 ஆயிரத்து 837 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அடுத்த ஆண்டு மார்ச் வரை வைகை அணையில் வைகை பங்கீட்டு நீர் 1354 மி.கன அடி எட்டும் போதெல்லாம் வைகை பூர்வீக பாசன பகுதி 1, 2, 3க்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 விகித அடிப்படையில் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.60 அடியாக உள்ளது. 766 கன அடி நீர் வருகிற நிலையில் 1100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 3539 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 100 கன அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 52.30 கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.