தமிழ்நாட்டில் உள்ள மொத்த வனப்பரப்பு எவ்வளவு?- பசுமை தமிழ்நாடு இயக்கம் அதிர்ச்சி தகவல்
- பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் மரம், காடுகளின் பரப்பளவை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டு 1.31 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னை:
இந்திய வரைபடத்தின் கடை கோடியில் உள்ள தமிழ்நாடு வளமான காடுகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் கடற்கரைகளை இயற்கையாக பெற்றுள்ளது. மனிதனின் வாழ்க்கை முறை என்பது தாவரம், விலங்குகள் மற்றும் உயிர் சூழல் அமைப்பு ஆகியவற்றோடு தவிர்க்க இயலாதவாறு பின்னி பிணைந்துள்ளது.
எனவே சூழலியல் சமன்பெறுவதற்கு நிலம், நீர், காடுகள் மற்றும் பல்லுயிரின பெருக்கம் ஆகியவற்றை பாதுகாத்து, மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும். பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் மரம் மற்றும் காடுகளின் பரப்பளவை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் செடிகள் நடவு செய்து வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர், தமிழ்நாட்டில் உள்ள மொத்த வனப்பரப்பு எவ்வளவு?, இது தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம்? என்று கேட்டிருந்த கேள்விக்கு, "இந்த விவரம் தொடர்பாக எந்த அறிக்கையும் இல்லை" என்ற அதிர்ச்சி தகவலை பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.
தீவிர காடு வளர்ப்பு திட்டத்துக்கு இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு, பசுமை தமிழ்நாடு இயக்கத்துக்கு ரூ.37½ கோடி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ரூ.30 கோடி, தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.4.37 கோடி, கடற்கரைகளில் உயிரி கவச முறையை செயல்படுத்த ரூ.15.16 கோடி, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, இந்த ஆண்டு எவ்வளவு மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது? என்ற வினாவுக்கு, 1.31 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.