பிரேசில் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது: 11 பேர் பலி
- வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
- ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள பெர்னாம்புகோ மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர நகரமான ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், ரெசிப் அருகே உள்ள ஜங்கா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 3 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடிவருகின்றனர்.
இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி 2010ம் ஆண்டு மூடப்பட்டதாகவும், அதன்பின்னர் பல குடும்பங்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.