செய்திகள்

ஜிம்பாப்வே அதிபர் தேர்தல் முடிவு அறிவிப்பதில் சிக்கல்

Published On 2018-08-01 05:54 GMT   |   Update On 2018-08-01 05:54 GMT
ஜிம்பாப்வே அதிபர் தேர்தல் முடிவை அறிவிப்பதில் தேர்தல் கமி‌ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. #ZimbabweElection #ZimbabwePresidentialElection

ஹராரே:

ஜிம்பாப்வேயில் 40 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக எம்மர்சன் நங்காக்வா (72) புதிய அதிபரானார்.

அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது.

அதில் அதிபர் நங்காக்வா ‌ஷனு-பிஎப் கட்சி சார்பிலும், நெல்சன் சமீசா எதிர்க்கட்சிகளின் எம்.டி.சி. கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்டனர்.

மேலும் 21 பேர் களத்தில் உள்ளனர். இருந்தாலும் நங்காக்வா- சமீசா ஆகிய 2 பேர் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றதாக அதிபர் நங்காக்வா தெரிவித்தார்.


அதை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் எதிர்க் கட்சி வேட்பாளர் நெல்சன் சமிசா வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதனால் முடிவை அறிவிப்பதில் தேர்தல் கமி‌ஷனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் தலைநகர் ஹராரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆடிப் பாடியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ஜிம்பாப்வே முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ZimbabweElection #ZimbabwePresidentialElection

Tags:    

Similar News