ஸ்பெயின் கனமழையில் 217 பேர் பலி.. பார்வையிட வந்த மன்னர் மீது சேற்றை அள்ளி வீசிய மக்கள் - வீடியோ
- வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது.
வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. வாலென்சியா பகுதியில் மட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. பலர் மாயமாகி உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. ஆனாலும் மீட்புப் பணி சரியாக நடக்கவில்லை என்று மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.
இந்த சூழலில் வாலென்சியாவில் பைபோர்ட்டோ நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் அவரது மனைவி, ராணி லெட்டிஸியா வருகை தந்தனர். அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.
பாதுகாலவர்கள் புடை சூழ ராணியுடன் மன்னர் ஃபிலிப் வருவதை பார்த்த மக்கள் ஆத்திரத்தில் அவர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே சாலையில் கிடந்த சேற்றை அள்ளி மன்னர் மீதும் ராணி மீதும் வீசினர். இதனால் மன்னரின் முகம் மற்றும் ஆடைகள் சேறானது. உடன் வந்த ஸ்பெயின் பிரதமரும் இதில் சிக்கிக்கொண்டார்.
உடன் இருந்த பாதுகாவலர்கள் உடனே மன்னரை சுற்றி அரணாக நின்றனர். அவர்களை விலக்கி ஆத்திரமுற்றிருந்த மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மன்னர் பேசினார். ஆனால் கோபத்தில் இருந்த மக்கள் அவரை கடுமையாக திட்டித் தீர்த்தனர். நிலைமை சரியில்லாததால் ராணியுடன் அந்த இடத்தில் இருந்து மன்னர் அகன்றார். மன்னர் மீதே சேறு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.