உலகம்

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பரிந்துரைகள்

Published On 2023-02-22 17:01 GMT   |   Update On 2023-02-22 17:01 GMT
  • பரிந்துரைக்க தகுதியுடையவர்கள், தாங்கள் முன்மொழிந்த நபர் அல்லது அமைப்பின் பெயரை வெளியிடலாம்.
  • காலநிலை ஆர்வலர்களான ஸ்வீடனின் கிரேட்டா தன்பெர்க் பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305  பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

நோபல் சட்டத்தின்படி, பரிந்துரை செய்யப்பட்டவர்களின் அடையாளம் 50 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்க தகுதியுடையவர்கள், தாங்கள் முன்மொழிந்த நபர் அல்லது அமைப்பின் பெயரை வெளியிடலாம்.

இந்த ஆண்டு அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் மற்றும் ஒரு சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை நிறுவ செயல்படும் உக்ரைன் குழுவும் அடங்கும்.

சிறையில் அடைக்கப்பட்ட புதின் எதிர்ப்பாளரும், விஷ தாக்குதலுக்கு ஆளான ஊழல் எதிர்ப்பு ஆர்வலருமான அலெக்ஸி நாவல்னி, பத்திரிகையாளரும் அரசியல் ஆர்வலருமான விளாடிமிர் காரா முர்சா மற்றும் ஜனநாயக ஆதரவு இளைஞர் இயக்கம் வெஸ்னா ஆகியோருக்கும் அமைதிப்பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காலநிலை ஆர்வலர்களான ஸ்வீடனின் கிரேட்டா தன்பெர்க், உகாண்டாவின் வனேசா நகேட், ஈரானிய பெண்கள் உரிமைகள் ஆர்வலர் மசிஹ் அலினெஜாட் மற்றும் அவரது ஹிஜாப் எதிர்ப்பு இயக்கமான மை ஸ்டெல்தி ப்ரீடம், சால்வேஷன் ஆர்மி ஆகிய பெயர்களும் இந்த பட்டியலில் இருக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிகபட்சமாக 376 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். அதைவிட இந்த ஆண்டு சற்று குறைவான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News