உலகம் (World)

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து- 51 பேர் உயிரிழப்பு

Published On 2024-09-22 11:13 GMT   |   Update On 2024-09-22 11:15 GMT
  • நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
  • காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 70-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரங்கத்துக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியதாவது:-

நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News