உலகம்

6 பாதுகாப்பு வீரர்கள் பலி: போராட்டக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள்-பாக். ராணுவம் உத்தரவு

Published On 2024-11-26 12:46 GMT   |   Update On 2024-11-26 12:52 GMT
  • இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
  • இந்த வன்முறையில் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72), மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைப் பொருட்படுத்தாத இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4,000 பேரை போலீசார் கைதுசெய்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News