வெள்ள பாதிப்பு... பாகிஸ்தானுக்கு 250 கோடி டாலர் வழங்கும் ஆசிய வளர்ச்சி வங்கி
- பாகிஸ்தான் நிதியமைச்சர் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தேசிய இயக்குனர் சந்தித்து பேசினர்.
- வெள்ளத்தால் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஜூன் மாத மத்தியில் மழை வெள்ளத்திற்கு 1600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடும் இழப்பை சந்தித்துள்ள பாகிஸ்தானுக்கு நிவாரணப் பணிகளுக்காக 2.3 முதல் 2.5 பில்லியன் (250 கோடி) டாலர்கள் வரை வழங்க உள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தேசிய இயக்குனர் யாங் யீ ஆகியோர் சந்தித்து பேசியபோது இந்த அறிவிப்பு வெளியிடுப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு யாங் யீ தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
வெள்ளத்தால் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வந்துள்ள தூதுக்குழுவை வரவேற்ற நிதியமைச்சர் இஷாக் தார், நாட்டில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிய வளர்ச்சி வங்கியின் பங்கு மற்றும் ஆதரவைப் பாராட்டினார்.
பொருளாதாரம் பெரிய சவால்களை எதிர்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார், பொருளாதார சரிவை அரசு கட்டுப்படுத்தி, நடைமுறைக்கேற்ற கொள்கை முடிவுகளால் பொருளாதாரத்தை சரியான பாதையில் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.