ஆப்கானிஸ்தானில் 19 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி தண்டனை
- ஷரியா சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் தலிபான்களின் நோக்கத்தை இந்த தண்டனை காட்டுகிறது.
- 1990களின் பிற்பகுதியில் பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி போன்ற தண்டனை நிறைவேற்றப்பட்டது
காபூல்:
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தில் கள்ளத்தொடர்பு, திருட்டு மற்றும் வீட்டை விட்டு ஓடுதல் போன்ற குற்றத்திற்காக 19 பேருக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை உச்ச நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். தக்கார் மாகாணம் தலோகன் நகரில் தண்டனை விதிக்கப்பட்ட 10 ஆண்கள் மற்றும் 9 பெண்களுக்கு 39 முறை கசையடி வழங்கப்பட்டதாகவும், இந்த தண்டனை கடந்த 11ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நகரின் பிரதான மசூதியில் பெரியவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் நீதிமன்ற அதிகாரி கூறியுள்ளார்.
தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கசையடி மற்றும் பிரம்படி தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ தகவல் இது என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, 1990களின் பிற்பகுதியில் தலிபான்களின் முந்தைய ஆட்சியின்போது, தலிபான் நீதிமன்றங்களில் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்களுக்கு பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி மற்றும் கல்லெறிதல் ஆகியவற்றை மேற்கொண்டது.
அனைத்து ஷரியா சட்டங்களையும் அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக சமீபத்தில் தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.