அதிக விலைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்
- மியூனிச் சுங்க துறை அர்னால்டிற்கு அபராதம் விதித்தது
- ஆஸ்திரியாவின் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட்டில் ஏலம் நடைபெற்றது
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் ஹீரோ, 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger). கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்தவர் அர்னால்ட்.
ஆஸ்திரியாவில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை மாசுபாடுக்கு எதிரான முயற்சிகளுக்கு நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.
பயணத்தின் போது, தென் கிழக்கு ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகர விமான நிலையத்தில் அவரது உடைமைகளில், உடைமை பட்டியலில் குறிப்பிடாத விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம், சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.
ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர்.
அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆஸ்திரியாவில் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட் (Stanglwirt Resort) எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் ஏலம் நடைபெற்றது.
அர்னால்டின் கைக்கடிகாரம் சுமார் ரூ.2 கோடி 45 லட்சம் (2,70,000 யூரோ) தொகைக்கு ஏலம் போனது.
அங்கு நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய அர்னால்ட், "உலகளவில் மாசுபாடு குறித்து நடைபெறும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நான் பார்க்கிறேன். நாம் இந்த விஷயத்தில் நீண்ட தூரம் வந்து விட்டோம். தற்போது இப்பிரச்சனைக்கு தீர்வு காண பலர் முன் வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மாசுபாட்டிற்கு எதிரான் என் போராட்டத்தில் இணைந்த அனைவருக்கும் என் நன்றி" என தெரிவித்தார்.
இந்த ஏல நிகழ்ச்சியில் மொத்தம் 1.31 மில்லியன் யூரோ வசூலானது குறிப்பிடத்தக்கது.