உலகம்

டாக்கா கலவரம் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு

Published On 2024-08-13 12:48 GMT   |   Update On 2024-08-13 12:48 GMT
  • ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
  • முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

டாக்கா:

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வங்கதேசத்தில் வன்முறையும், கலவரமும் ஓயவில்லை. இந்த வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஜூலை 19-ம் தேதி மாலை 4 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை மந்திரி அசதுஸ்மான் கான் கமல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், முன்னாள் டிபி தலைவர் ஹருன் ஓர் ரஷீத், முன்னாள் டிஎம்பி கமிஷனர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் டிஎம்பி இணை கமிஷனர் பிப்லாப் குமார் சர்க்கர் உள்ளிட்ட 6 பேரும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பிச்சென்ற பின் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News