கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப பாதுகாப்பு அளிக்க வேண்டும்- பசில் ராஜபக்சே கோரிக்கை
- தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம்.
- கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் அமெரிக்காவில் குடியேற கோத்தபய விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோத்தபய ராஜபக்சே, விரைவில் இலங்கை திரும்புவார் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் நாடு திரும்பினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பசில் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.
இதுக்குறித்து ராஜபக்சே கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து தருமாறு பசில் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார் என்று தெரிவித்துள்ளது.
ராஜபக்சே கட்சியின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.