உலகம்

பூடான் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த மக்கள் ஜனநாயக கட்சி: பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2024-01-10 05:35 GMT   |   Update On 2024-01-10 07:07 GMT
  • பூடான் பாராளுமன்ற தேர்தலின் இறுதிச்சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது.
  • மொத்தமுள்ள 47 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 30 இடங்களை கைப்பற்றியது.

திம்பு:

தெற்கு ஆசிய நாடான பூடானில் கடந்த 2008-ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஜனநாயக ஆட்சி அமலுக்கு வந்தது. தற்போது அங்கு 4-வது பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

மொத்தம் 47 தொகுதிகள் கொண்ட பூடான் பாராளுமன்ற தேர்தலின் முதன்மை சுற்று தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் பூடான் டெண்ட்ரல் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 94 வேட்பாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதற்கிடையே, நேற்று இறுதிச்சுற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.இதில் முன்னாள் பிரதமர் டிசிரிங் டாப்கேயின் மக்கள் ஜனநாயக கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மக்கள் ஜனநாயக கட்சி 47 தொகுதிகளில் 30 இடங்களைக் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூடான் டெண்ட்ரல் கட்சி 17 இடங்களைப் பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.

மக்கள் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றுள்ளதால் 58 வயதான டிசிரிங் டாப்கே 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்நிலையில், பூடானில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள டிசிரிங் டாப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News