இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியா வருகை
- இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டன. சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்திய பயணத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.
மேலும் 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.