கேமரூனில் நிலச்சரிவு- இறுதி சடங்கில் பங்கேற்ற 14 பேர் பலி
- நிலச்சரிவு ஏற்பட்டு 20 அடி உயர மண் சுவர் இடிந்து விழுந்தது.
- மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
யவுண்டே:
கேமரூன் தலைநகர் யவுண்டே கனமழை காரணமாக இந்த ஆண்டு பல பேரழிவை சந்தித்தது. வெள்ளத்தால் அந்த பகுதியின் உள்கட்டமைப்பு சிதைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள 20 மீட்டர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்பகுதி மக்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு மண்சுவர் அவர்கள் மேல் இடிந்து விழுந்தது.
இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி ஆளுநர் நசெரி பால் தெரிவித்துள்ளார். மீட்பு படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மத்திய மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்து செல்லப்படுவதாகவும், மண்ணில் புதையுண்ட மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.