கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ராணுவத்தில் சேர அனுமதி
- கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.
- கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கனடாவில் 1 லட்சம் இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர்.
- இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
டொராண்டோ :
2-ம் உலகப்போர் முடிவில் கனடா நாட்டின் ராணுவம் உலகின் வலுமிக்க படைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது பிற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவின் பாதுகாப்பு படை மிகவும் சிறியது.
கனடா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், நேட்டோ மற்றும் நோராட் ஆகிய ராணுவ கூட்டமைப்புகளில் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்பு படை பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் சமீபகாலமாக கனடா ராணுவத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான காலிபணியிடங்கள் இருப்பதாகவும், இந்த ஆண்டில் சுமார் 6 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் பாதி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ராணுவத்தில் சேரலாம் என அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.
இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ராணுவ வெளிநாட்டு விண்ணப்பத்தாரர் என்கிற நுழைவு திட்டத்தின் கீழ் மட்டுமே ராணுவத்தில் சேர தகுதி பெற்றிருந்தனர். தனிநபர்களுக்கான இந்த திட்டம் பயிற்சி செலவுகளை குறைப்பதோடு, விமானி அல்லது டாக்டர் போன்ற சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.
ஆனால் தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவே 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் ராணுவத்தில் எளிதில் சேரலாம். அதேபோல் 16 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் ராணுவத்தில் இணையலாம். ராணுவத்தில் அதிகாரியாகும் எண்ணம் இருந்தால் அதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
கனடா ராணுவத்தின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது. ஏனெனில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.
கனடாவுக்கு வரும் 5 வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியர் என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கனடாவில் 1 லட்சம் இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர். 2025-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்திருக்கிறது.
எனவே ராணுவத்தில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரை அனுமதிப்பதன் மூலம் ராணுவ பலத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என கனடா ராணுவம் நம்புகிறது.