சீனா மீண்டும் முட்டுக்கட்டை: பாக். தீவிரவாதியை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு
- பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.
நியூயார்க்:
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார்.
தீவிரவாதி அப்துல் ரவூப், 1999-ம் ஆண்டு இந்திய விமான கடத்தல். 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை பயங்கரவாத தடை பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் அப்துல் ரவூப்பை சேர்க்க இந்தியா தனது முன் மொழிவை வைத்தது.
இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.
இதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிறுத்தியது. இதற்கு முன்பும் பல பாகிஸ்தான் தீவிரவாதிக்கு எதிராக தீர்மானங்களை சீனா நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.