உலகம்

புகுஷிமா சிக்கல் எதிரொலி - ஜப்பான் பொருட்கள் விற்பனை சரிவு

Published On 2024-01-24 06:23 GMT   |   Update On 2024-01-25 01:32 GMT
  • 2011ல் சுனாமி தாக்குதலால்புகுஷிமா அணு உலை நிலையத்தில் கடல்நீர் புகுந்தது
  • ஜப்பானை மையமாக கொண்ட SK-II, சீனாவில் விற்பனை செய்து வருகிறது

2020 கோவிட் பெருந்தொற்று காலத்தில் மந்தமடைய தொடங்கிய உலக பொருளாதாரம், சில வருடங்கள் சீரடைந்து, மீண்டும் நலிவடைய தொடங்கி விட்டது.

உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் சீன பொருளாதாரமும் இதற்கு தப்பவில்லை. விலைவாசி அதிகரிப்பால் அந்நாட்டில் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதையும், தம்பதிகள் குழந்தைகள் பெற்று கொள்வதையும் தள்ளி போடுகினறனர் எனும் தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

2011ல் பெரும் சுனாமி தாக்குதலால் ஜப்பானில் புகுஷிமா அணு உலை நிலையம் பாதிப்புக்குள்ளானது.

இதனையடுத்து அங்கிருந்து கதிரியக்க பாதிப்பிற்கு உள்ளான நீரை, கடலில் வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி நீரை வெளியேற்றுவதாக ஜப்பான் கூறியது.


2023 ஆகஸ்ட் மாதம், சீனாவின் எதிர்ப்பை புறக்கணித்து ஜப்பான் நீரை கடலில் வெளியேற்றியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சீனா, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவு வகைகளுக்கு தடை விதித்தது.

ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்களை சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பயன்படுத்த மறுக்கின்றனர்.

உலகின் முன்னணி பன்னாட்டு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் அமெரிக்காவின் பிராக்டர் அண்ட் கேம்பிள் (Procter & Gamble).

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும், அதன் துணை நிறுவனம், எஸ்கே-II (SK-II).

எஸ்கே-II, சீனா உட்பட பல உலக நாடுகளில், உயர்ரக தோல் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்கிறது.

இந்நிலையில், சீனாவில் இதன் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது தெரிய வந்துள்ளது.

கடந்த 2023 அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரையிலான விற்பனை 34 சதவீதம் சரிந்து விட்டது.

பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் வரும் ஆண்டிற்கான நிகர லாபம் குறைவாகவே இருக்கும் என தெரிகின்றது.

வரும் மாதங்களில் "ஜப்பான் புறக்கணிப்பு" தொடர்ந்தால், உலக பொருளாதாரம் மேலும் மந்தமடையலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News