அமெரிக்காவில் தொடரும் சம்பவம்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி
- சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.