உலகம்

ஆன்லைன் மூலம் நிதி மோசடி- இலங்கையில் 137 இந்தியர்கள் கைது

Published On 2024-06-29 02:14 GMT   |   Update On 2024-06-29 02:14 GMT
  • இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது.
  • மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கொழும்பு:

இலங்கையில் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன.

இது தொடர்பாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில் அந்த மோசடி கும்பல் 'வாட்ஸ்-அப்' குழுவில் ஆட்களை சேர்த்து அதிக லாபம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து முதலீடு செய்ய வைத்தும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தியும் பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது. மேலும் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான மடிவெலா, பத்தரமுல்லை மற்றும் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் குற்றப் புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மோசடி கும்பலை சேர்ந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 137 பேர் இந்தியர்கள் ஆவர். மற்ற 19 பேரும் ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் குற்றப் புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News