உலகம்

8 கப்பல் படை அதிகாரிகள் தலை தப்பியது

Published On 2023-12-28 12:16 GMT   |   Update On 2023-12-28 12:16 GMT
  • 8 பேரின் குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீட்டை கோரினர்
  • புதிய தண்டனையின் விவரம் குறித்து இரு அரசுகளும் தகவல் தெரிவிக்கவில்லை

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் கண்ணீர் மல்க பலமுறை கோரிக்கை வைத்தனர். அவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பலர் இத்தீர்ப்பை கத்தார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

இம்மாத தொடக்கத்தில் கத்தாருக்கான இந்திய தூதர் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது தூதரும், அதிகாரிகளின் குடும்பத்தினரும் நேரில் அங்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று, கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும், குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

புதிய தண்டனையின் விவரம் குறித்து இதுவரை இரு நாட்டு அரசாங்கங்களும் தெரிவிக்கவில்லை.

Tags:    

Similar News