உலகம்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பெண் பிரதமர்

Published On 2022-08-25 02:59 GMT   |   Update On 2022-08-25 02:59 GMT
  • அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
  • சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ஆபாச புகைப்படத்தால் பிரச்சனை எழுந்துள்ளது.

ஹெல்சின்கி :

34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்ற சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சன்னா மரின் போதைப்பொருளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலக வலியுறுத்தின. எனினும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் சன்னா மரின் எந்தவிதமான போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சன்னா மரின் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

சன்னா மரினின் வீட்டில் 2 பெண்கள் மேலாடை இன்றி உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்ற போதிலும் அது அவரது வீட்டில் எடுக்கப்பட்டது என்பதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நாட்டு மக்களிடம் சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "என் கருத்துப்படி, அந்த புகைப்படம் பொருத்தமானது அல்ல. அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்திருக்க கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

Tags:    

Similar News