லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் கைது?
- அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.
பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் இந்த ஆண்டு சல்மான் கான் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு உள்பட பல வழக்குகள் தொடர்பாக அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கடந்த மாதம் மகாராஷிடிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கில் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார். கைது செய்யப்பட்டதாக கூறப்படும் அன்மோல் பிஷ்னோய் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. அவரை கைது செய்ய மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.
உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. முன்னதாக அன்மோல் பிஷ்னோய் கனடாவில் இருப்பதாக நம்பப்பட்டது.
இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் அன்மோல் பிஷ்னோயை மிகவும் தேடப்படும் பட்டியலில் சேர்த்தது. அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.