உலகம்

குற்றத்தில் உடந்தை? - பத்திரிகையாளர்களை குறி வைக்கும் இஸ்ரேல்

Published On 2023-11-09 13:58 GMT   |   Update On 2023-11-10 05:45 GMT
  • செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து புலனாய்வு செய்யும் அமைப்பு, ஹானஸ்ட்ரிபோர்டிங்
  • பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் இது என இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது

கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தி 1400க்கும் மேல் இஸ்ரேலியர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

இத்தாக்குதலின் போது நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் வலைதளங்களில் வெளிவந்தன.

இந்நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேல் நாட்டின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) அமைப்பு, காசா பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தது.

ராய்டர்ஸ், தி அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஹசன் எஸ்லையா, யூசுப் மசோட், அலி மஹ்முத், ஹதேம் அலி, மொஹம்மத் ஃபய்க் அபு மொஸ்டஃபா மற்றும் யாசர் குடிஹ் எனும் காசாவை சேர்ந்த 6 பத்திரிக்கையாளர்களையும் ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ராணுவ டாங்க் ஒன்றை ஹமாஸ் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து அவர்கள் படம் பிடித்துள்ளதை இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்திருப்பதாவது:

அக்டோபர் 7 அன்று காசா முனை பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் சில புகைப்பட பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த பத்திரிக்கையாளர்களுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நின்றிருக்கிறார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாக பார்க்கிறது.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

இதுவரை ராய்டர்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News