உலகம்

சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புகிறார்

Published On 2022-07-27 02:52 GMT   |   Update On 2022-07-27 02:52 GMT
  • கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • கோத்தபய ராஜபக்சே 28-ந்தேதிவரை மட்டுமே சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும்.

கொழும்பு :

போராட்டக்காரர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். மறுநாள், அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார்.

அத்துடன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டை சிங்கப்பூர் அரசு வழங்கி உள்ளது. எனவே, அவர் 28-ந் தேதிவரை மட்டுமே அங்கு தங்கி இருக்க முடியும்.

இந்நிலையில், நேற்று கொழும்பு நகரில் பேட்டி அளித்த இலங்கை போக்குவரத்து மந்திரியும், மந்திரிசபை செய்தித்தொடர்பாளருமான பந்துல குணவர்த்தனாவிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது:-

கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவோ அல்லது மறைந்து வாழ்வதாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது பற்றியும் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பந்துல குணவர்த்தனா, ''அத்தகைய சூழ்நிலை உருவானால், கோத்தபய ராஜபக்சேவுக்கு எந்த தீங்கும் நேராதவாறு நாட்டில் உள்ள பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்'' என்று கூறினார்.

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வக்கீல்கள் சிலர், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்துக்காக கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக கைது செய்யுமாறு சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலிடம் குற்றவியல் புகார் கொடுத்துள்ளனர்.

இதுவரை அதிபராக இருந்ததால், கோத்தபய ராஜபக்சேவுக்கு சட்ட பாதுகாப்பு இருந்தது. இப்போது சட்ட பாதுகாப்பு இல்லாததால் அவர் மீது புகார்கள் அளிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News