உலகம்

HACKED: 'இனிமேல் இது போர்'.. பிரதமர் அலுவலகம்- காவல்துறை இணையதளங்களை முடக்கிய போராட்டக்காரர்கள்

Published On 2024-07-23 02:06 GMT   |   Update On 2024-07-23 02:06 GMT
  • பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
  • 'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.

வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

 

நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. ராணுவம் வரவழைக்கப்பட்டு போரட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கான உத்தரவையும் அரசு பிறப்பித்தது. இதற்கிடையே  போராட்டத்துக்கு காரணமான இடஒதுக்கீட்டை அரசு ரத்து செய்துள்ளது.

ஆனாலும் போராட்டம் ஓயாமல் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த இணையதளங்களில், 'ஆப்ரேஷன் ஹண்ட் டவுன், மாணவர்களை கொள்வதை நிறுத்துங்கள்' என்றும் 'இது இனிமேல் போராட்டம் அல்ல போர்' என்றும் சிவப்பு எழுத்துக்களால் ஹேக்கர்கள் மேற்கோள் காட்டிய வாசகங்கள் திரையில் வருகின்றன.

ஹேக்கர்கள் விடுத்துள்ள பிரகடனத்தில், 'திறன் மிக்க மாணவர்களால் அமைதியான வழியில் நடந்தப்பட்ட போராட்டத்தை அரசு மற்றும் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து வன்முறையாலும் கொலைகளாலும் ஒடுக்க முயன்றுள்ளது. இனி இது வெறும் போராட்டம் இல்லை. நீதிக்கான, சுதந்திரத்துக்கான, எதிர்காலத்துக்கான போர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.


 



அதுமட்டுமின்றி, ' மற்ற ஹேக்கர்கள், பத்திரிகையாளர்கள், இன்டலிஜென்ஸ் நிபுணர்கள் எண்களின் இந்த முன்னெடுப்பில் சேர வேண்டும், உங்களிடம் உள்ள திறனும், தழுவலும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு தேவை. வேடிக்கை பார்ப்பதற்கான காலம் முடிந்துவிட்டது' என்றும் "THE R3SISTANC3" கும்பல் ஹேக்கர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. ஹேக்கர்களின் அந்த பிரகடனத்தில் இடம்பெற்ற புகைப்படங்களில், இரண்டு நாயுடன் அடையாளம் தெரியாத 5 நபர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News