2-வது பட்டியல் இஸ்ரேலிடம் ஒப்படைப்பு: மேலும் பிணைக்கைதிகள் இன்று விடுவிப்பு
- இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுதலை.
- பிணைக்கைதிகள் 25 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளதாக அறிவிப்பு.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து வெளிநாட்டினர் உள்பட 250-க்கு மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 14 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று போர் நிறுத்தம் தொடங்கியது.
இதில் முதல் கட்டமாக ஹமாஸ் அமைப்பிடம் பிணைக்கைதிகளாக இருந்த 13 இஸ்ரேலியர்கள் மற்றும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களை ஹமாஸ் அமைப்பினர், செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து இஸ்ரேலுக்கு சென்றடைந்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு குடும்பத்தினரிடம் இணைவார்கள் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சிறைக்காவலில் இருந்து 24 பெண்கள் உள்பட 39 பேரை இஸ்ரேல் விடுதலை செய்தது. அவர்கள் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தப்படி 2-வது நாளாக இன்று மேலும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
காசாவில் இருந்து 2-வது கட்டமாக விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு அளித்து உள்ளது. அந்த பட்டியலை இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
இன்று விடுவிக்கப்படும் பிணைக்கைதிகள் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
நேற்றைப்போலவே இன்றும் 20-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 196 டிரக்குகளில் உணவு பொருட்கள், தண்ணீர், மருத்துவ பொருட்கள் ஆகியவை ராபா எல்லை வழியாக காசாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.