இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் ஈரான்
- மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேல்:
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்டு ஆஸ்டின் கூறியதாவது:-
இஸ்ரேலை பாதுகாப்பதற்கான உரிமை அந்நாட்டுக்கு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று, இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நடத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதன் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு, ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு இயக்கங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் அமெரிக்கா வலுவாக உள்ளது.
அதேபோல, போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுப்பதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகிறது.