எலிமென்டரி ஸ்கூலா?.. மொபைல் போனுக்கு தடை: அயர்லாந்து பெற்றொர்கள் அதிரடி
- மாணவர்கள் பள்ளியில் ஸ்மார்ட்போன் உபயோகிக்க ஏற்கெனவே தடை உள்ளது
- குழந்தைகளின் கைகளில் இணையமா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகளா என கேட்கிறார்
வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பள்ளி நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள 8 பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் எலிமென்டரி எனப்படும் ஆரம்ப பள்ளி பருவம் முடியும் வரை மொபைல்போன் உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான வயதை அடையும் வரையில் பள்ளி, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மொபைல் போன் உபயோகிக்க முடியாது.
"சிறு குழந்தைகளிடம் காணப்படும் பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்து இந்நகர மக்கள் தந்திருக்கும் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. குழந்தைகளின் கைகளில் இணையம் இருக்கிறதா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகள் உள்ளனரா என கணிக்க முடியாத அளவிற்கு இணையத்தில் வரும் தகவல்களால் அவர்கள் கல்வியில் கவனச்சிதறலுடன் மன அழுத்தம், மறதி, மற்றும் தூக்கமின்மை உட்பட பல சிக்கல்கள் தோன்றின" என அந்நகர மருத்துவ உளவியல் நிபுணர் ஜஸ்டினா ஃப்ளின் தெரிவித்தார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இதே கருத்தை ஐக்கிய நாடுகளின் சபையும் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.