எகிப்து மீது தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: இஸ்ரேல் ராணுவம் விளக்கம்
- இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
- எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 16-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் பீரங்கியில் இருந்து வந்த குண்டுகள் நேற்று எகிப்து நாட்டில் தாக்கியது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் திடீரென ஏவுகணை எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாக நடக்கிறது. இந்த சண்டையில் சூயஸ் கால்வாய் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் இல்லை. தவறுதலாக எகிப்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கெரெம் ஷாலோம் பகுதியில் எல்லையை ஒட்டிய எகிப்திய போஸ்ட் மீது பீரங்கி ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவிக்கிறது என பதிவிட்டுள்ளது.