உலகம்

10 வினாடி கூட அது நடக்கவில்லையாம்.. பாலியல் வழக்கில் ஒருவர் விடுதலை: நீதிபதியின் தீர்ப்புக்கு வலுக்கும் கண்டனம்

Published On 2023-07-13 16:44 GMT   |   Update On 2023-07-13 16:44 GMT
  • குற்றத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய நீதிபதி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தினார்.
  • சமூக வலைத்தளங்களில் தீர்ப்பை விமர்சனம் செய்தும், கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

இத்தாலியில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்ததற்கு நீதிபதி சொன்ன காரணம் அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

ரோம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை அந்த பள்ளியின் காப்பாளர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த சிறுமி படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து அவரது பேண்டை பிடித்து இழுத்ததுடன், பின்பகுதியை தொட்டு, உள்ளாடையையும் பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அந்த நபர், சிறுமியை பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், கேலியாக இவ்வாறு செய்தேன் என கூலாக கூறியிருக்கிறார்.

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட காப்பாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

எனினும் விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது குற்றம்சாட்டப்பட்ட காப்பாளரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் வினோதமாக இருந்தது. அதாவது இந்த சம்பவம் 10 வினாடிகளுக்கும் குறைவாகவே நடந்ததாம். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரமே நடந்ததால், குற்றத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய நீதிபதி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தினார்.

இந்த தீர்ப்பு இத்தாலி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்தும், கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். சிலர் கேமராவை அமைதியாக உற்றுப் பார்த்தும், 10 வினாடிகள் தங்கள் அந்தரங்க பகுதிகளை தொட்டுப் பார்த்தும் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினர். இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்களில் "brief groping" அல்லது "10 seconds" போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தாறுமாறாக கருத்துக்களை பதிவிட, இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.

Tags:    

Similar News