உலகம்

வான்வழி போக்குவரத்தை தடை செய்த ராணுவ ஆட்சி: போர் மூளும் அபாயத்தில் நைஜர்

Published On 2023-08-07 11:20 GMT   |   Update On 2023-08-07 11:20 GMT
  • நைஜரில் மொஹம்மத் பஸோம் அதிபராக பதவி வகித்து வந்தார்
  • நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என்கிறது சியானி அரசாங்கம்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.

அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, ஜூலை 26 அன்று ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.

ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என சியானிக்கு நேற்று இரவு வரை கெடு விதித்திருந்தது. இதற்காக தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

ஆனால், இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாத சியானி அரசாங்கம், நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என கூறியது.

இந்நிலையில் இந்த புதிய அரசாங்கம், அண்டை நாடுகளிடமிருந்து தாக்குதல் வரும் ஆபத்து உள்ளதாக கூறி, நைஜர் மீதான வான்வழி போக்குவரத்தை தேதி குறிப்பிடாமல் தடை செய்துள்ளது. இதனை மீறும் விதமாக போக்குவரத்து மேற்கொள்ளும் விமானங்களுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தற்போது அந்நாட்டின் வான்பரப்பில் எந்த விமான போக்குவரத்தும் நடைபெறவில்லை. அந்நாட்டை நோக்கி சென்ற விமானங்கள் இந்த தடையுத்தரவை அடுத்து வேறு வான்வழி பாதையில் மாற்றப்பட்டன.

அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா ஃபாஸோ புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தேவைப்பட்டால், ரஷியாவிடம் ராணுவ உதவியை நைஜர் கோரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Tags:    

Similar News