உலகம்

அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் தயாராகி விட்டார்-ஒபாமா

Published On 2024-08-21 04:50 GMT   |   Update On 2024-08-21 04:50 GMT
  • ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.
  • டிரம்ப் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படும் ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று அதிபர் ஜோபைடன் பேசினார். இன்று மாநாட்டில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது:-

இக்கட்டான நேரத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு சிறந்த அதிபராக ஜோபைடனை இந்த நாடு நினைவில் கொள்ளும். அவரை ஜனாதிபதி என்று அழைப்பதோடு அவரை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன்.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பற்றி அக்கறையுள்ள ஒரு அதிபர் நமக்கு தேவை. மக்களுக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் சிறந்த ஊதியத்திற்கு பேரம் பேசும் ஒரு அதிபர் நமக்கு தேவை. அந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார். அது அவரால் முடியும். அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் தயாராகி விட்டார்.

டிரம்ப் மற்றும் அவரது பணக்கார நன்கொடையாளர் உலகை இப்படி பார்க்க வில்லை. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது சக்தி வாய்ந்தவர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்பதுதான். ஆனால் சுதந்திரம் பற்றிய பரந்த கருத்து நம்மிடம் உள்ளது.

நாடு பிளவுப்படுத்த இருப்பதாக நாம் சிந்திக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். அவரை ஆதரிக்கும் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார். இது அரசியலில் பழமையான தந்திரங்களில் ஒன்றாகும். அவரது செயல் மிகவும் பழுதடைந்துவிட்டது.

இன்னும் 4 ஆண்டுகள் குழப்பம் நமக்கு தேவையில்லை. அதன் தொடர்ச்சி பொதுவாக மோசமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

அமெரிக்கா ஒரு புதிய அத்தியாயத்துக்கு தயாராக உள்ளது. கமலா ஹாரிசுக்காக நாம் தயாராக இருக்கி றோம். அவர் இந்த பதவிக்கு தயாராக இருக்கிறார். டிரம்ப் அதிகாரத்தை தனது நோக்கங்களுக்கு ஒரு வழிமுறையாக பார்க்கிறார். அவர் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு நடுத்தர வர்க்கம் பணம் கொடுக்க விரும்புகிறார்.

கமலா ஹாரிசிடம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் டிரம்ப் மோசமாக பேசி வருகிறார். நாம் நம்பும் அமெரிக்காவுக்காகப் போராடுவது நம் அனைவரின் கையில் இருக்கிறது.

இவ்வாறு பராக் ஒபாமா பேசினார்.

Tags:    

Similar News