கிரிமியாவுக்கு செல்லும் ரஷியாவின் முக்கிய பாலம் மீது மீண்டும் தாக்குதல்.. 2 பேர் பலி
- இந்த பாலம் வழியாகத்தான் ரஷிய படைகளுக்கான தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பப்படுகின்றன.
- இரண்டு கடல்சார் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
மாஸ்கோ:
உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, உக்ரைன் தரப்பில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டன. அதன்பின் உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கிவருகின்றன. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. இழந்த பகுதிகளை உக்ரைன் படைகள் படிப்படியாக மீட்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், ரஷியாவையும்- அந்த நாட்டுடன் இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் கெர்ச் பாலத்தின் மீது இன்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் ரஷிய படைகளுக்கான தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இந்த பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உடனடியாக பாலம் மூடப்பட்டது. தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்களின் மகள் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து கெர்ச் பாலத்தில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் 19 கிமீ இடைவெளியில் ரெயில் போக்குவரத்தும் சுமார் ஆறு மணி நேரம் நிறுத்தப்பட்டது. பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ரஷிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உக்ரைன் தரப்பில் இருந்து இரண்டு கடல்சார் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த பாலம் மீது இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரக் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பல மாதமாக சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.