அர்ஷத் நதீமை சந்தித்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி - வீடியோ வைரல்
- ஈட்டியெறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
- ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.
இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐநாவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஹாரிஸ் தாருடன் அர்ஷத் நதீம் இருக்கும் வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
மார்கசி முஸ்லீம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஷ் கயூம் மற்றும் அவர்களின் இளைஞர் பிரிவு தலைவர் முகமது ஹாரிஸ் தார் ஆகியோர் அர்ஷத் நதீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். முகமது ஹாரிஸ் லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்பவர் என்று சொல்லப்படுகிறது.