துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயம்.. தேடுதல் பணி தொடரும்.. மலாவி அதிபர்
- மோசமான வானிலை காரணமாக விமானம் திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது.
- மாயமான விமானத்தை தேட அண்டை நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. துணை அதிபர் சௌலோஸ் மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து காலை 9.17 மணிக்கு புறப்பட்டது.
லிலோங்கில் புறப்பட்ட ராணுவ விமானம் சூசு விமான நிலையத்தில் காலை 10.02 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். எனினும், மோசமான வானிலை காரணமாக விமானம் தலைநகருக்கே திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் ரேடாரில் இருந்து மாயமாகி இருக்கிறது.
மாயமான விமானத்தை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாயமான விமானத்தை தேடுவதற்கு அண்டை நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், நார்வே மற்றும் இஸ்ரேல் உள்ளிட்டவைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
மாயமான விமானம் கிடைக்கும் வரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மலாவி அதிபர் லசாரஸ் சக்வெரா தெரிவித்தார்.