உலகம்

காசா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்: ஜோ பைடன்

Published On 2023-11-14 03:09 GMT   |   Update On 2023-11-14 03:09 GMT
  • அல்-ஷிபா மருத்துவமனை சுற்றி வளைக்கப்பட்டு, அப்பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது.
  • எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை அல்-ஷிபா. இந்த மருத்துவமனையில் காயம் அடைந்தோர், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனை இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மறைந்து கொண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேல் குற்றச்சாட்டை காசா மறுத்துள்ளது.

மருத்துவனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயல் இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்குபெட்டரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும்? என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது கவலையை இஸ்ரேலிடம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு, "மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News