இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு: பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு
- இம்ரான்கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டின் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.