உலகம்

பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்: இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் வெற்றி

Published On 2024-02-09 01:24 GMT   |   Update On 2024-02-09 01:24 GMT
  • தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
  • தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

இம்ரான் கான் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதாக தெரிகிறது. நவாஸ் ஷெரீப் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

இதனால் இம்ரான் கான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செயலாளர் ஜபர இப்பால் முதல் முடிவை வெளியிட்டார்.

அதன்படி இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். கைபர் பக்துன்கா மாகாணத்தில் உள்ள பிகே-76 தொகுதியில் சமியுலலா கான் 18 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளர் பஜல ஹக்கீம் கான் பிகே-6 தொகுதியில் 25330 வாக்குகள் பெற்று பெற்று பெற்றுள்ளார். அதேபோல் அலிகான் பிகே-4 தொகுதியில் 30022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கான் ஆட்சியமைக்கும் அளவிற்கு போதுமான இடங்களை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்துகிறது. தேர்தல் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

நவாஸ் ஷெரீப் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

இம்ரான் கான் கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News