நிதி நெருக்கடி அதிகமா இருக்கு.. எனக்கு சம்பளமே வேண்டாம் - பாக். ஜனாதிபதி
- பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று தெரிவித்து இருக்கிறார். அந்நாட்டில் நிலவும் மோசமான நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை தான் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
68 வயதான சர்தாரி பாகிஸ்தான் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த ஞாயிற்று கிழமை (மார்ச் 10) பதவியேற்றார். அந்த வகையில் நிதி நிலையை கருத்தில் கொண்டு, நாட்டின் கருவூலத்திற்கு மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி சம்பளமாக மாதம் ரூ. 8 லட்சத்து 46 ஆயிரத்து 550 பெற்று வந்தார். இந்த தொகை 2018-ம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகும். பாகிஸ்தானின் பணக்கார அரசியல் தலைவர்களில் ஒருவராக தற்போதைய ஜனாதிபதி சர்தாரி விளங்குகிறார்.