உலகம்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு

Published On 2024-06-15 09:15 GMT   |   Update On 2024-06-15 09:17 GMT
  • இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்.

பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (எச்எஸ்டி) விலையை லிட்டருக்கு ரூ.10.20 மற்றும் ரூ.2.33 என குறைத்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.258.16 ஆகவும், எச்எஸ்டி விலை லிட்டருக்கு ரூ.267.89 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் எரிபொருள் விலையை மதிப்பாய்வு செய்யும் அந்நாட்டு நிதிப் பிரிவு, சமீபத்திய விலைக் குறைப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த பதினைந்து நாட்களுக்கும் இந்த புதிய விலைகள் பொருந்தும் என்று கூறியது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (ஓக்ரா) நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கை இரட்டை இலக்க பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், கடந்த ஒன்றரை மாதத்தில் தொடர்ந்து 3 முறை எரிபொருள் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News