உலகம்

பாகிஸ்தானில் தொடர்ந்து இழுபறி: தேர்தல் வன்முறையில் 2 பேர் பலி

Published On 2024-02-10 01:14 GMT   |   Update On 2024-02-10 01:14 GMT
  • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
  • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

Tags:    

Similar News