பாகிஸ்தான் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் வாகா எல்லையில் ஒப்படைப்பு
- பாகிஸ்தான் சிறையில் 5 ஆண்டாக அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர்.
- லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கராச்சி:
இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது. கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர் என பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.