உலகம்

பஞ்சாப் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்... உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம்

Published On 2023-04-06 12:48 GMT   |   Update On 2023-04-06 12:48 GMT
  • பஞ்சாப் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • தேர்தல் நடத்தும்படி தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு சிக்கல் காரணமாக பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தல் நடத்துவதை அரசு தாமதம் செய்தது. ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி வலியுறுத்தியது. பஞ்சாப் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

பஞ்சாப் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பை ரத்து செய்தது. பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்படி தேர்தல் ஆணையம் மே 14ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த அரசு, தீர்ப்பை நிராகரித்தது. மேலும், தீர்ப்பை நிராகரிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் (தேசிய சபை) இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

Tags:    

Similar News