4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது பிலிப்ஸ்
- எலெக்ட்ரானிக்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் பிலிப்ஸ் உற்பத்தி செய்து வருகிறது.
- பிலிப்ஸ் நிறுவனத்தின் சுவாசக் கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிளைகளை நிறுவி உள்ளது. சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த நிறுவனங்களில் இருந்து 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிலிப்ஸ் நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், பிலிப்ஸ் நிறுவனத்தின் சுவாசக் கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோளாறான கருவிகளால் மூன்றாம் காலாண்டில் சுமார் 1.3 பில்லியன் யூரோ நஷ்டம் ஆகியுள்ளது.
மூன்றாவது காலாண்டில் பணவீக்க அழுத்தங்கள், சீனாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றால் பிலிப்ஸின் செயல்திறன் மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, உடனடியாக சுமார் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிலிப்ஸ் சிஇஓ ராய் ஜேக்கப்ஸ் அறிவித்துள்ளார்.
உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக சுமார் 4,000 ஊழியர்களை குறைக்க உள்ளோம், இது கடினமான அதேசமயம் அவசியமான முடிவு என சிஇஓ தெரிவித்தார்.