உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 10 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினோம்: ரஷியா

Published On 2024-05-15 09:51 GMT   |   Update On 2024-05-15 09:51 GMT
  • ரஷியாவின் பல்வேறு இடங்களை குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகள் தாக்குதல்.
  • ஏவுகணைகளுடன் டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்து வருகிறது.

தற்போது தரைவழி தாக்குதல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், வான்தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக டிரோன்கள் மூலம் தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதனால் இருதரப்பும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைனால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியாவில் உள்ள சுத்தரிக்கு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது

இந்த நிலையில் இன்று ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவை நோக்கி உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா தெரிவித்துள்ளத.

கிரிமியா பகுதியில் கருங்கடல் பகுதியில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

கருங்கடலுக்கு மேற்பகுதியிலும், பெல்பெக் விமானப்படை தளத்திற்கு அருகிலும் உக்ரைனின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது. சுடடு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் உதிரிகள் வீடுகள் மீது விழுந்தன. ஆனால், இதன் காரணமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என் செவாஸ்டாபோல் கவர்னர் மிகைல் ரஸ்வோஜயேவ் தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் 9 உக்ரைன் டிரோன்கள், இரண்டு வில்ஹா ராக்கெட், இரண்டு ரேடார் எதிர்ப்பு HARM ஏவுகணைகள் பொல்கோரோட் மாகாணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின்போது ஏவுகணைகள் வீடுகள் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

அத்துடன் குர்ஸ்க் மாகாணத்தில் ஐந்து உக்ரைன் டிரோன்கள், பிரியன்ஸ்க் மாகாணத்தில் மூன்று டிரோன்கள் ஆகியவற்றையும் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு எல்லையில் இருந்து சுமார் ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாடார்ஸ்டான் மாகாணத்திலும் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் ரஷியா 100 முதல் 125 சதுர கிலோ மீட்டர் அளவிலான உக்ரைன் பகுதியை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிலப்பரப்பிற்குள் ஏழு கிராமங்கள் உள்ளன. ஆனால், இந்த கிராமங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கள் இரண்டு பயணமான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலும், ரஷியாவின் பதிலடியும் நடந்துள்ளது.

Tags:    

Similar News