உலகம்

கொட்டித் தீர்த்த கனமழை: ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழப்பு

Published On 2023-05-04 04:09 GMT   |   Update On 2023-05-04 08:36 GMT
  • வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
  • வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.

ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்புகள், விளை நிலங்கள், சாலைகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரத்தில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது கனமழை பெய்ததால் பல வீடுகள் இடிந்துள்ளன. இதுவே உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ருவாண்டாவில் வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது.

இதேபோல் அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News